ரேஷன்கடையில் வழங்கிய அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார்


ரேஷன்கடையில் வழங்கிய அரிசியில்  பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார்
x

கெலமங்கலம் அருகே ரேஷன்கடையில் வழங்கிய அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி வழங்கப்பட்டது.

குடும்ப அட்டைதாரருக்கு 20 முதல் 35 கிலோ வரை அரிசி வழங்கும் நிலையில் அதில் 5 கிலோ முதல் 8 கிலோ வரை பிளாஸ்டிக் அரிசி கலந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அந்த அரிசியை அடுப்பில் வைத்து வேக வைக்கும் போது பசை போல் பொங்கி வருவதாகவும், இதனால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேலிடம் கேட்ட போது மக்களுக்கு வழங்கப்படும் அரிசியானது பிளாஸ்டிக் அரிசி அல்ல. அவை செறிவூட்டப்பட்ட அரிசி. அந்த அரிசியில் இரும்பு சத்து, பி-12 மற்றும் போலிக ஆசிட் உள்ளடக்கிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story