நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு தென்காசி பஸ்கள் வந்து செல்ல பொதுமக்கள் கோரிக்கை


நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு தென்காசி பஸ்கள் வந்து செல்ல பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு தென்காசி பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்து விட்டு, ரூ.79 கோடியில் புதிதாக கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பஸ் நிலைய கட்டுமான பணி

அங்கு கட்டுமான பணியின்போது முறைகேடாக மணல் அள்ளியதாக எழுந்த புகாரை தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனால் பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிவுறும் நிலையில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து டவுன் பஸ்களை இயக்குவதற்காக ஏற்பாடு செய்யும் வகையில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கடந்த 12-ந்தேதி சந்திப்பு பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து டவுன் பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

19-ந்தேதி முதல் டவுன் பஸ்கள் இயக்கம்

தொடர்ந்து வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து சில வழித்தடங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக ராஜா பில்டிங் சாலையில் கட்டுமான பணிக்காக சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு, சற்று உள்ளே தள்ளி அமைக்கப்பட்டது.

இந்த பகுதியில் பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக பொக்லைன் உதவியுடன் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் 19-ந்தேதி முதல் இங்கிருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளதால், வண்ணார்பேட்டை, டவுன் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்காசி, முக்கூடல் பஸ்கள்

இதேபோன்று சந்திப்பு பஸ் நிலையம் மூடப்படுவதற்கு முன்பாக, இங்கு வந்து சென்ற தென்காசி, முக்கூடல், சுரண்டை, கடையம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் இயக்கப்பட்டால் நெல்லை சந்திப்பு அரவிந்த் ஆஸ்பத்திரி அருகில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடி குறையும்.

மேலும் சந்திப்பு ெரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் மற்றும் சந்திப்பு பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சிரமப்படுவது குறையும். ரெயில் நிலையத்திற்கு குறிப்பிட்ட ரெயிலை பிடிப்பதற்கு பெட்டி, படுக்கைகளுடன் வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சிலர் அவசரத்தில் வரும்போது ரெயிலை தவற விடுகிறார்கள். எனவே தென்காசி, முக்கூடல் உள்ளிட்ட மார்க்கமாக வரும் பஸ்களை நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story