பேரம்பாக்கத்தில் புதிய துணை மின் நிலையம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை


பேரம்பாக்கத்தில் புதிய துணை மின் நிலையம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
x

பேரம்பாக்கத்தில் புதிய துணை மின் நிலையம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

துணை மின் நிலையம்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் உள்ளது. இந்த மின்சார வாரிய துணை மின் நிலையம் கடந்த 1994 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த மின் நிலையத்தில் இருந்து பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், பாகசாலை, சின்னமண்டலி, லட்சுமிவிலாசபுரம், நரசிங்கபுரம், களாம்பாக்கம், சிவபுரம், ஓ.எம்.மங்கலம், கப்பாங்கோட்டூர், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, கொண்டஞ்சேரி, மப்பேடு, எறையாமங்கலம், கீழச்சேரி, கொட்டையூர் போன்ற சுற்று வட்டார பகுதிகளுக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பாழடைந்த நிலை

இங்கு மின் பொறியாளர்கள், ஆக்க முகவர்கள், கம்பியாளர்கள், உதவியாளர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 38 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவதால் கட்டிடங்கள் முழுவதும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. அலுவலக கட்டிடம் மற்றும் பணம் வசூல் செய்யும் கட்டிடம் ஆகியவற்றின் மீது மரங்கள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து பாழடைந்து நிலையில் காணப்படுகியது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

மின்வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு பெறுதல், மற்றும் மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்க வரும் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. குறிப்பாக புதர்மண்டி காணப்படும் இந்த துணைமின் நிலைய கட்டிட வளாகத்திற்குள் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் கட்டிடங்களில் மழைநீர் தேங்கி ஒழுங்கும் நிலையில் உள்ளது. இதனால் ஊழியர்கள் தினந்தோறும் அச்சத்துடன் பணிக்கு வந்து செல்கின்றனர்.

கோரிக்கை

எனவே பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தின் கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றி புதிய கட்டிடம் அமைத்து தர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story