ஏரியை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஏரியை கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமயபுரம்:
சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் கிராமத்தில் தண்ணீர்பந்தல் ஏரி என்ற ஏரி இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த ஏரியின் ஒரு பகுதி தனியாருக்கு சொந்தமானது என்றும், மற்றொரு பகுதி புறம்போக்கு இடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஏரியில் மண்ணை கொண்டு நிரவிவிட்டதாக தெரிகிறது. இதை கண்டித்தும், அந்த ஏரியை மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும் நெய்குளம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் போன ஏரியை கண்டுபிடித்து தருமாறு கோஷங்களை எழுப்பினர். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு 'கிணற்றை காணோம்' என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாக ஒரு காட்சி அமைந்திருக்கும். அதை நினைவுபடுத்துவது போல் நேற்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரியை காணோம் என்று பொதுமக்கள் கோஷங்களை எழுப்பியது வினோதமாக இருந்தது.