தக்கலை அருகே பரபரப்பு:3 குட்டிகளுடன் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்
தக்கலை அருகே 3 குட்டிகளுடன் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தக்கலை:
தக்கலை அருகே 3 குட்டிகளுடன் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரப்பர் தோட்டம்
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேளிமலை வனப்பகுதியில் தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்த ரப்பர் தோட்டத்திற்கு தினமும் அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பால்வெட்ட செல்வது வழக்கம்.
இந்தநிலையில் சரல்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) கடந்த சில நாட்களுக்கு முன்பு ரப்பர் பால்வெட்டுவதற்காக நரிச்சிகல் பகுதிக்குசென்றார். அதிகாலை நேரத்தில் அவர் ரப்பர் மரத்தில் பால் வெட்டிக்கொண்டிருந்தார்.அப்போது ஏதோ ஒரு விலங்கு ஓடுவதை பார்த்து சற்று தூரத்தில் சென்று ஒரு மரத்தில் ஏறி அது எந்த விலங்கு என்று பார்த்துள்ளார். அந்த விலங்கு பாறையில் மற்றொரு விலங்கை கடித்து தின்று கொண்டிருப்பதை பார்த்தார்.
சிறுத்தை நடமாட்டம்
இதனால் பதற்றம் அடைந்த அவர் இதுபற்றி அருகில் உள்ள தோட்டத்தில் பால் வெட்டி கொண்டிருந்தவர்களிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து அனைவரும் சேர்ந்து அந்த பகுதிக்கு வந்து டார்ச்லைட் அடித்து பார்த்துள்ளனர்.
அப்போது அங்கு சிறுத்தையின் உருவம் தெரிந்துள்ளது. உடனே சிறுத்தை தங்களை நோக்கி வந்து விடக்கூடாது என்று பயந்த அவர்கள் ரப்பர் தோட்டத்தின் கீழ்பகுதிக்கு வந்துவிட்டனர்.
அதன் பின்னர் காலை 7 மணிக்கு சிறுத்தையை பார்த்த அந்த பாறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு முள்ளம்பன்றியை சிறுத்தை தின்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் ஊரில் வந்து பொதுமக்களிடம் கூறினார்கள்.
மேலும் இதுபற்றி வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
3 குட்டிகளுடன் வலம் வருகிறது
இந்த நிலையில் நேற்று காலையில் சரல்விளை பகுதியை ேசர்ந்த நெல்சன் என்பவரின் மனைவி ஹெலன் மேரி (40) குழிவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்ட சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பாறையில் இருந்து ஒரு சிறுத்தை தாவி குதித்து ஓடுவதை பார்த்துள்ளார். இதனால் பதறிப்போன அவர் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். எடுத்த ரப்பர் பாலை அங்கேயே போட்டுவிட்டு ஊருக்கு வந்து விட்டார். தோட்டத்தின் கீழே இறங்கி வந்து அதுபற்றி ஊரில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார். இதனால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுபோல் கொரங்கேற்றிமலை பகுதியில் 3 குட்டிகளுடன் சிறுத்தை செல்வதை ஒருவர் பார்த்தார் என கூறப்படுகிறது. இந்த தகவல்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது.
கூண்டுவைத்து பிடிக்க வேண்டும்
சிறுத்தை எப்போது வேண்டுமானாலும் இரை தேடி ஊருக்குள் வரலாம் என மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். காரணம் சரல் விளையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில்தான் குழிவிளை உள்ளது. ஆகவே வனத்துறை உடனடியாக பொதுமக்கள் குடியிருப்பிற்கு மிக அருகில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.