சத்தியமங்கலம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி- நடவடிக்கை எடுக்க குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


சத்தியமங்கலம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி- நடவடிக்கை எடுக்க குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x

சத்தியமங்கலம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தற்போது கீழ்பவானி வாய்க்காலில் தினமும் 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கீழ்பவானி வடிநில கோட்டம் ஈரோடு 2-ன் செயற்பொறியாளர், பாசன சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் நேற்று முதல் முறை வைத்து தண்ணீர் வழங்க தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படுத்தி உள்ளார். நெல் நடவுப்பணிகள் முடிவடையாத நிலையில், இவ்வாறு முறை வைத்து நீர் வழங்குவது தவறான முடிவாகும். எனவே, அனைத்து மதகுகளுக்கும் உரிய தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ரூ.50 லட்சம் மோசடி

சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை தட்டாம்புதூர் காலனி பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

விவசாய தொழில் செய்து வரும் நாங்கள் அரசூர் ராஜவீதியை சேர்ந்த ஒருவரிடம் ஏலச்சீட்டுக்காக பணம் செலுத்தி வந்தோம். பல தவணைகளாக ரூ.50 லட்சம் வரை செலுத்தி உள்ளோம். இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அந்த நபர் எங்களுக்கு சேர வேண்டிய சீட்டுத்தொகையை எங்களுக்கு தராமல் காலம் தாழ்த்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பணம் தராததால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

206 மனுக்கள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன் கொடுத்திருந்த மனுவில், 'அந்தியூரில் இருந்து அண்ணா மடுவு வரை ரோட்டின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சாக்கடை கழிவு நீரையும் இணைத்துள்ளனர். இதனால் நீர் நிலைகள் மாசடையும் அபாயம் உள்ளதால், சாக்கடை கழிவுநீர் செல்ல தனியாக வடிகால் அமைக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சின்னசாமி கொடுத்திருந்த மனுவில், 'மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை அரசுத்துறை நிறுவனங்களில் அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரன், கலால் உதவி ஆணையாளர் சிவகுமரன், மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story