பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: பவானிசாகர் அணையின் மீன்பிடி உரிமத்தை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும்- மீனவர்கள் கோரிக்கை மனு


பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: பவானிசாகர் அணையின் மீன்பிடி உரிமத்தை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும்- மீனவர்கள் கோரிக்கை மனு
x

பவானிசாகர் அணையின் மீன்பிடி உரிமத்தை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மீனவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு

பவானிசாகர் அணையின் மீன்பிடி உரிமத்தை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மீனவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மீன்பிடி உரிமம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

பவானிசாகர் மீனவர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமையில் மீனவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி 32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கங்களை சேர்ந்த 622 மீனவர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன்பிடி உரிம ஒப்பந்தம் கடந்த 19-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை பவானிசாகர் மற்றும் சிறுமுகையில் உள்ள மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடிக்கும் உரிமத்தை வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி உரிமத்தை வழங்க வேண்டும்.

வேலை நிறுத்தம்

இந்தநிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரருக்கே மீண்டும் 2 மாதங்கள் ஒப்பந்தத்தை நீட்டித்து கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 20-ந் தேதி முதல் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்காமல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

பவானிசாகர் மீனவர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், சிறுமுகை மீனவர்கள் கூட்டுறவு சங்கம் ஆகிய 2 சங்கங்களிலும் 1,463 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி உரிமத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

இடைவெளியின்றி தடுப்புகள்

சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

அந்தியூரில் இருந்து பச்சாம்பாளையம் அண்ணாமடுவு வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைவெளி இல்லாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கு பெட்ரோல் பங்க், ஆஸ்பத்திரி, வங்கிகள் உள்ளன. இதனால் சாலையை கடந்து மறுபுறம் செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே பொதுமக்களுக்கு வசதியாக இடைவெளி விட்டு தடுப்புகளை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

295 மனுக்கள்

அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி கூலிவலசு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

எங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்கு அரசு பள்ளிக்கூடத்துக்கான சத்துணவு சமையல் கூடம், மின் மாற்றி, பொது கழிப்பிடம், குடிநீர் தொட்டி ஆகியன உள்ளன. அதன் அருகே எங்களின் குலதெய்வ கோவிலான மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்தநிலையில் வண்டிபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உத்தரவு பெற்று உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து கோவில், மக்கள் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை அகற்றக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 295 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதை செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்


Related Tags :
Next Story