திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வேலை வாய்ப்பு, கடன் உதவி, வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம், பசுமை வீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 264 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

உதவி உபகரணங்கள்

அதனைத் தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் கலெக்டர் 18 வயதிற்கு மேற்பட்ட காது கேளாத மற்றும் பார்வையற்ற பட்டபடிப்பு பயிலும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 549 வீதம், ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 490 மதிப்பீட்டிலான ஸ்மார்ட் போன்களையும், கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 840 வீதம் ரூ.68 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலான தையல் எந்திரங்களையும் உள்பட பல்வேறு உதவி உபகரணங்களை மாற்றுத்தினாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், தனித்துணை கலெக்டர் மதுசூதனன், கலால் உதவி ஆணையர் பரமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story