எண்ணூரில் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - தேதி குறிப்பிடாமல் கலெக்டர் ஒத்திவைத்தார்


எண்ணூரில் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - தேதி குறிப்பிடாமல் கலெக்டர் ஒத்திவைத்தார்
x
தினத்தந்தி 30 Sep 2023 7:18 AM GMT (Updated: 30 Sep 2023 7:51 AM GMT)

எண்ணூரில் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட கலெக்டர் தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

சென்னை

சென்னை எண்ணூரில், எண்ணூர் பவுண்டரி உருக்காலை உள்ளது. இந்த உருக்காலையில் 2 மடங்கு உற்பத்தி செய்ய விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த விரிவாக்க திட்டம் குறித்து மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் அன்னை சிவகாமி நகர் சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது.

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாவட்ட மாசுகட்டுப்பாட்டு பொறியாளர் இந்திராகாந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், கோமதி, சிவகுமார், தி.மு.க. மேற்கு பகுதி செயலாளர் அருள்தாசன் மற்றும் எண்ணூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம நல சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும், எண்ணூர் பவுண்டரி விரிவாக்க திட்டத்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே கருப்பு துகள் படிவதால் இப்பகுதியில் டி.பி., ஆஸ்துமா,பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளிட்ட உடல் உபாதை பிரச்சினைகள் உள்ளன. தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் கருத்து கேட்பு கூட்டத்தை வைக்கவில்லை. பொதுமக்களுக்கு முறையாக தகவல் கொடுக்கவில்லை.

எனவே கருத்து கேட்பு கூட்டத்தை மாவட்ட கலெக்டர் ரத்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருமித்த குரலில் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கருத்து கேட்பு கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.


Next Story