சோழவரம் அருகே அரசு நிலத்தில் வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


சோழவரம் அருகே அரசு நிலத்தில் வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

சோழவரம் அருகே அரசு நிலத்தில் வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நெற்குன்றம் ஊராட்சி உள்ளது. இங்கு மேட்டு சூரப்பட்டு, அல்லிமேடு, தெலுங்குகாலனி உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள கால்நடைகள் மேய்வதற்காக 35 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது. இதில் நீண்ட காலமாக கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் நிலத்தில் வளர்ந்துள்ள புல்செடிகள் கொடிகளை கால்நடைகள் மேய்ந்து வந்த நிலையில் ஆடு மாடுகள் பயன்படுத்தி வரும் 16 ஏக்கர் நிலத்தை அடர்ந்த காடு வளர்ப்பு திட்டத்தின் வாயிலாக மரக்கன்றுகள் வைக்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு இரும்பு வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்க இருந்தனர்.

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நெற்குன்றம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் எங்கள் ஊராட்சியில் உள்ள கால்நடைகள் மேய்க்கால் நிலத்தில் 1500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மேய்ந்து வருகின்றன. இதனால் இங்கு வேலி அமைப்பதால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் செல்வகுமார் இதுகுறித்து வரும் 27-ந்்தேதி பேசி முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நெற்குன்றம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story