புதிய கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


புதிய கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

வெள்ளியணை அருகே புதிய கிரானைட் குவாரி அமைக்க ெபாதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர்

கருத்து கேட்பு கூட்டம்

கரூர் மாவட்டம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் தனியாரால் அமைக்கப்பட உள்ள கிரானைட் கல்குவாரிக்கு அனுமதி வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை வெள்ளியணை செல்லாண்டிபட்டியில் நடத்தியது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கனிம வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குவாரி அமைவிடம் குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களின் கருத்துக்களை கேட்டனர். அப்போது கே.பிச்சம்பட்டியை சேர்ந்த கிராம மக்களுக்கு இக்கூட்டம் குறித்து முறையாக தெரிவிக்கபடவில்லை என்றும், குவாரி அமைய உள்ள கிராமத்தில் கூட்டத்தை நடத்தாமல் வெள்ளியணையில் நடத்துவதற்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளும், இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

பின்னர் அதிகாரிகளின் சமரசத்திற்கு பின்னர் கருத்து தெரிவித்த அப்பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஏற்கனவே இப்பகுதியில் உள்ள குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது, மேலும் குவாரிகளை அமைப்பதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படும், நீர்வழி பாதைகளை அழித்து குவாரிகள் அமைப்பதால் இப்பதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படும், இதனால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பிரச்சினை ஏற்படும்,

குவாரிக்கு அருகில் பல குடியிருப்புகள் உள்ளதால் குவாரியில் வைக்கப்படும் வெடியால் குடியிருப்பு கட்டிடங்கள் பாதிப்பு அடைகிறது, குவாரியில் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் வெளி ஆட்களை வைத்து வேலை செய்வதால், படித்த உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர் என்பன உள்பட பல்வேறு எதிர்ப்பு கருத்துக்களை எடுத்து கூறி குவாரி அமைக்க கூடாது என்று கூறினார். பொதுமக்களின் இக்கருத்துகளை அதிகாரிகள் பதிவு செய்து கொண்ட பின் கூட்டம் நிறைவு பெற்றது.


Next Story