சிவாயம் பகுதியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


சிவாயம் பகுதியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

குளித்தலை அருகே சிவாயம் பகுதியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

கருத்து கேட்பு கூட்டம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட சிவாயம் வடக்கு கிராமத்தில் 2.80 எக்டேர் பரப்பளவில் மைன்ஸ் நிறுவனம் மூலம் கல் எடுக்கும் கல்குவாரி அமைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் குளித்தலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலட்சுமி பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்த பகுதியில் கல்குவாரி அமைத்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், கட்டுமான தொழிலுக்கு தேவைப்படும் கற்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது போன்ற காரணங்களை கூறி கல்குவாரி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

இதில் பங்கேற்ற சிலர் கல்குவாரி அமைத்தால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்று தெரிவித்தனர். அதுபோல ஒரு பகுதியில் கல்குவாரி அமைக்கப்பட வேண்டும் என்றால் அதற்காக அரசு கூறும் அத்தனை சாத்தியக்கூறுகளும் இருக்கிறதா என்று அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். ஒரு தலைப்பட்சமாக அதிகாரிகள் செயல்படக்கூடாது. அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

விதிமுறைகள்...

மேலும் அவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள் அரசின் எந்த ஒரு விதிமுறைகளையும் கடைபிடித்து நடத்தப்படவில்லை. முள்வேலிகளோ, பெயர்பலகைகளோ பொருத்தப்படவில்லை.

எனவே குவாரி அமைக்க என்னென்ன விதிமுறைகள் கூறப்படுகிறதோ அதை முறையாக செயல்படுத்தினால் மட்டுமே கல் குவாரி அமைக்க அனுமதிக்க வேண்டும், என்றனர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story