திருத்தணியில் சுடுகாடு இடத்தில் கடைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு - சுவர்களை இடித்து அகற்றினர்


திருத்தணியில் சுடுகாடு இடத்தில் கடைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு - சுவர்களை இடித்து அகற்றினர்
x

சுடுகாடு இடத்தில் நகராட்சி நிர்வாகம் கடைகள் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகள் கட்ட எழுப்பப்பட்டிருந்த சுவர்களை இடித்து அகற்றினர்.

திருவள்ளூர்

திருத்தணி நகராட்சி ராஜீவ்காந்திநகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வசதிக்காக அதே பகுதியில் மாநில நெடுஞ்சாலையோரம் 2 ஏக்கர் பரப்பில் சுடுகாடு அமைத்து நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில் திருத்தணி நகராட்சி நிர்வாகம் சுடுகாட்டின் முன்பகுதியில் இருந்த சுற்றுச் சுவரை இடித்துவிட்டு, அங்கு ரூ.7½ லட்சம் மதிப்பீட்டில் 6 கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. நகராட்சி சார்பில் கடைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை ராஜீவ்காந்தி நகர் பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தி, கடைகள் கட்டுவதற்கு எழுப்பப்பட்டிருந்த சுவர்களை இடித்து அகற்றினர். மேலும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், ஆத்திரமடைந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்டின்பிரேம்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடைகள் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story