சாலை விரிவாக்கத்திற்காக கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு


சாலை விரிவாக்கத்திற்காக கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

கந்தம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கரூர்

தார் சாலை விரிவாக்க பணி

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை முதல் கந்தம்பாளையம் வரை கழிவுநீர் வடிகாலுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலாயுதம்பாளையம்- கொடுமுடி செல்லும் தார் சாலையில் கந்தம்பாளையம் முதல் வேலாயுதம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் வரை தார் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பணிக்காக சாலையின் நெடுவிலும் 4-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழிகள் பறிக்கப்பட்டு பறிக்கப்பட்ட மண்களை ஏராளமான லாரிகளில் ஏற்றி வெளிப்பகுதிகளுக்கு கொண்டு சென்று கொட்டி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் குழி பறிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கூடினர்

இந்நிலையில் கந்தம்பாளையம் பகுதியில் உள்ள அங்கமுத்துசுவாமி கோவில் பகுதி தார் சாலை விரிவாக்கம் செய்யும் இடத்தில் இருப்பதால் அந்த கோவிலும் இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் கோவிலை அகற்றி விடுவார்கள் என நினைத்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அங்கமுத்து சாமிக்கு பல்வேறு மாலைகளை கொண்டு வந்து அணிவித்து நேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் முன்பு வாழை மரங்களை கட்டி அலங்காரம் செய்தனர். இதனால் அங்கு திடீரென சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூடினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் அருகே கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கமுத்து சுவாமி கோவிலை அங்கிருந்து அப்புறப்படுத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலை விட்டு விட்டு தார் சாலை அமைக்குமாறும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story