அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு


அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 23 Jun 2023 8:15 PM GMT (Updated: 23 Jun 2023 8:15 PM GMT)

குன்னூரில் நடந்த ஜமாபந்தியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். அவர்கள் குரங்குகள் படங்கள் அடங்கிய பதாகையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூரில் நடந்த ஜமாபந்தியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். அவர்கள் குரங்குகள் படங்கள் அடங்கிய பதாகையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜமாபந்தி

தாலுகா அலுவலகங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, உடனுக்குடன் தீர்வு காணப்படுவதுடன், கிராம நிர்வாக அலுவலர்களின் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. குன்னூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது.

ஜமாபந்தி அலுவலரும், குன்னூர் ஆர்.டி.ஓ.வுமான பூஷண குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தாசில்தார் சிவக்குமார் உடனிருந்தார். 3-வது நாளாக நேற்று குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் குன்னூர் ஊரகம், நகரம், எடப்பள்ளி, பர்லியார் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அடிப்படை வசதிகள்

இந்தநிலையில் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகள் செய்யாத குன்னூர் நகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் குரங்குகள் படத்துடன் கூடிய பதாகையை கழுத்தில் தொங்க விட்ட படி நூதன முறையில் மனு அளித்தனர். அதில், பல முறை நகராட்சிக்கு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, இந்திரா நகரில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, எங்களது கிராமத்தில் சாலை, குடிநீர், நடைபாதை போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர கோரி நகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால், நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனை குறிக்கவே குரங்குகள் படம் போட்ட பதாதைகளை கழுத்தில் மாட்டி வந்தோம் என்றனர்.


Next Story