டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், பயிற்சி உதவி கலெக்டர் ஷீஜா, வேளாண்மை உதவி இயக்குனர் பூவணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அம்பை தாலுகா விக்கிரமசிங்கபுரம் ராமலிங்கபுரம் பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் இசக்கிராஜன், மாவட்ட குழு உறுப்பினர் பழனி, செயற்குழு உறுப்பினர்கள் மோகன், சுடலைராஜ் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் மெயின் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பல்வேறு தெருக்களில் 600 வீடுகளில் சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில் 1500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மதுக்கடையால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மதுக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பாளையங்கோட்டை புதுக்குளம் ஊராட்சி சீனிவாசாஅவின்யூ பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தனர். பாளையங்கோட்டையை சேர்ந்த சிராஜ் என்பவர் கொடுத்த மனுவில், பாளையங்கால்வாயில் சாக்கடை கலக்காமலும், ஆக்கிரமிப்பு நடைபெறாமலும் தடுத்து தூய்மையான தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி யாதவ சமுதாய மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் 400 யாதவ குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பூர்வீக தொழிலான ஆடு, மாடு மேய்த்தலை இன்று வரை செய்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாடுகளை இங்குள்ள மந்தையில் அடைத்து பாதுகாத்து வருகிறோம். தொடர்ந்து மந்தையில் கால்நடைகளை அடைத்து வளர்க்க உதவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சாதி மறுப்பு காதல் திருமணத்தை சட்டப்பூர்வமாக நடத்திட காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மனு கொடுத்தனர். கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், எடை குறைவாக இருந்த 5 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஈமச்சடங்கு உதவித்தொகை 16 பேருக்கு வழங்கப்பட்டது. வேளாண்மை துறை சார்பில் ஒரு விவசாயிக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் டிராக்டர் வழங்கப்பட்டது.