சாலை அமைக்ககோரி பொதுமக்கள் கால்நடைகளுடன் மறியல்
எருமப்பட்டி அருகே சாலை அமைக்ககோரி பொதுமக்கள் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எருமப்பட்டி
குண்டும், குழியுமான சாலை
எருமப்பட்டி அருகே பொன்னேரி-கைகாட்டியில் இருந்து கோம்பைக்கு செல்லும் சாலை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி-கைகாட்டியில் இருந்து கோம்பைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்து செல்வதிலும், விவசாயம் செய்த விளை பொருட்களை கொண்டு செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
சாலை மறியல்
இந்தநிலையில் மண்சாலையில் உள்ள குழிகளை சீரமைக்கவும், தார்சாலை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பொன்னேரியில் இருந்து கைக்காட்டி செல்லும் சாலையில் பொதுமக்கள் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் தாசில்தார் சீனிவாசன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த மண் சாலையை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், போலீசார் உடன் இருந்தனர்.