குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

மணப்பாறை:

குடிநீரின்றி அவதி

மணப்பாறையை அடுத்த சீகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மிகவும் மோசமான நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு இன்னும் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் குடிநீரின்றி கடந்த 8 மாதங்களாக கடும் அவதிக்கு ஆளாகி வந்த பொதுமக்கள், இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

தற்போது கோடை காலத்தில் குடிக்கக்கூட தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு ஆளான மக்கள், நேற்று மணப்பாறை - விராலிமலை சாலையில் பாரதியார் நகர் பகுதியில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உரிய தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story