விருத்தாசலத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்


விருத்தாசலத்தில்  குடிநீர் தொட்டி ஆபரேட்டரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x

விருத்தாசலத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் கங்கை வீதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு அதே பகுதியில் நகராட்சி மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக ஆபரேட்டர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆபரேட்டர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி விட்டு மின்மோட்டாரை அணைக்காமல் சென்று விடுவதாக தெரிகிறது.

இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பி சாலையில் தேங்கி நிற்பதுடன், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. டேங்க் ஆபரேட்டரை மாற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பா.ம.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வ மணிகண்டன் தலைமையில் திடீரென குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வார்டு கவுன்சிலர் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆபரேட்டரை மாற்றி, பிரச்சினைக்கு தீர்வு கண்டால் தான் பூட்டை திறந்து விடுவோம், இல்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார், நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story