தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
மாத்தூரில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சேதம் அடைந்ததால் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருந்து பழைய மாத்தூருக்கு செல்லும் தார் சாலை உள்ளது. பழைய மாத்தூரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் அங்கு மாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம், உலகநாச்சி அம்மன் கோவில், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவையும் உள்ளன. இங்கு தினமும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அதிக எடையுடன் லாரிகள் வந்து செல்வதால் அப்பகுதி தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள்அவ்வழியே நடந்து செல்லவும், வாகனத்தில் செல்லவும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து, மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தனியார் தொழிற்சாலையை கண்டித்து நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.