லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், புகழூரில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. ஆலையை சுற்றி உள்ள புகழூர் நால்ரோடு, தோட்டக்குறிச்சி, செம்படாபாளையம், வேலாயுதம் பாளையம், கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் புகையில் உள்ள கரித்துகள்கள் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் விழுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவு நீர் இரவு நேரங்களில் வாய்க்கால்களில் கலக்கிறது. பல முறை ஆலை நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரித்திடமும் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று மாலை புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன், புகழூர் தாசில்தார் முருகன், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் கரித்துகள்கள் விழுவது சரி செய்யப்படும் என ஆலை நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.