கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2023 8:15 PM GMT (Updated: 7 Oct 2023 8:16 PM GMT)

பொள்ளாச்சி அருகே வழக்கமான சேவையை நிறுத்திவிட்டு கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி அருகே வழக்கமான சேவையை நிறுத்திவிட்டு கோவிலுக்கு இயக்கிய சிறப்பு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பஸ் நிறுத்தம்

பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது, பெருமாள்புதூர் கிராமம். இங்கு 120-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பொள்ளாச்சியில் இருந்து தடம் எண் 27 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. காலை 7.30 மணி, மாலை 5.30 மணி என இரு நேரங்களில் பெருமாள்புதூருக்கு பஸ் இயக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த பஸ் பெருமாள்புதூருக்கு வருவதில்லை. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இல்லை.

சிறைபிடிப்பு

இதற்கிடையில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று அர்த்தநாரிபாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போராட்டம் தொடரும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் இருந்து பெருமாள்புதூருக்கு இயக்கப்பட்ட பஸ் கொரோனா காலத்துக்கு பிறகு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து அர்த்தநாரிபாளையத்திற்கு வர வேண்டிய உள்ளது. மேலும் வேலைக்கு செல்லும் நபர்களும் கடும் சிரமப்படுகின்றனர். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஆனால் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கோவிலுக்கு மட்டும் சிறப்பு பஸ் இயக்குகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி நிறுத்திய பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story