இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருமயம் அருகே கோவில் திருவிழாவில் இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் விழாவில் தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விராச்சிலை கிராமத்தில் அடைக்கலம் காத்த அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த வாரம் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் 5 பேர் மீது அப்பகுதியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களும் புகார் கொடுத்தனர். அதில், அம்மன் கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது குடை ஏந்தி சென்றவர்களை விராச்சிலை கிராமத்தை சேர்ந்த 8 பேர் தரக்குறைவாக பேசினர்.
போராட்ட அறிவிப்பு
அப்போது அவர்களை தடுத்தபோது எங்களை தாக்கி கத்தியால் குத்தியதாக தெரிவித்தனர். மேலும் நடன நிகழ்ச்சியின் போது பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் திருப்பி தாக்கியதாகவும் கூறியிருந்தனர். இதையடுத்து பட்டியல் இனத்தை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் நேற்று காலை திருமயத்தில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். இதையறிந்த திருமயம் தாசில்தார் புவியரசன் இரு தரப்பினருக்கும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் திருமயம் ஸ்டேட் வங்கி முக்கம் அருகே பட்டியலின இளைஞர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின இளைஞர்களை தாக்கியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாளில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
பரபரப்பு
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக திருமயம் துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.