சின்னாளப்பட்டி அருகே கிறிஸ்தவ தேவாலயத்துக்கு பூட்டு போட்டதால் பொதுமக்கள் போராட்டம்


தினத்தந்தி 20 Oct 2023 9:30 PM GMT (Updated: 20 Oct 2023 9:30 PM GMT)

சின்னாளப்பட்டி அருகே கிறிஸ்தவ தேவாலயத்துக்கு பூட்டு போட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி அருகே கிறிஸ்தவ தேவாலயத்துக்கு பூட்டு போட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேவாலயத்துக்கு 'பூட்டு'

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே என்.பஞ்சம்பட்டியில் நூற்றாண்டு பழமையான திருஇருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வளாகத்திற்குள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தேவாலய வளாகத்தின் இரும்பு கேட்டை நேற்று காலை மர்மநபர் ஒருவர் பூட்டுப்போட்டு, பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இந்த தகவல் அந்த கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியது. மேலும் தேவாலய மணியும் அடிக்கப்பட்டது. இதனால் தேவாலயம் முன்பு கிறிஸ்தவ பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பூட்டப்பட்ட கேட்டின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தேவாலய கேட்டை பூட்டிய நபரை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த சின்னாளப்பட்டி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்பிறகு ஆத்தூர் தாசில்தார் வடிவேல் சரவணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கேட்டை பூட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

வாலிபர் கைது

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், அதே ஊரில் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சந்துரு என்ற சந்திரசேகரன் (வயது 34) என்பவர் தான் தேவாலய வளாக கேட்டுக்கு பூட்டு போட்டது தெரியவந்தது. இதுகுறித்து பஞ்சம்பட்டி ஊர் தலைவர் ஜான்பீட்டர் கொடுத்த புகாரின்பேரில், சந்துருவை போலீசார் கைது செய்தனர். தேவாலய கேட்டை பூட்டியது எதற்காக? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்துரு மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர் ஓராண்டு சிறையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தேவாலயத்துக்கு பூட்டுப்போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story