அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் போராட்டம்


அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
x

இனுங்கூர் ஊராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கரூர்

போராட்டம்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், இனுங்கூர் ஊராட்சிக்குட்பட்ட வைரபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு குடிநீர், தெரு விளக்குகள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அடிப்படை வசதிகள் கேட்டு நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், வைரபுரி பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் உள்பட ஏராளமானோர் இனுங்கூர் ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சைமணி மற்றும் அதிகாரிகள், குளித்தலை போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது ஓரிரு நாட்களில் உங்களது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மீண்டும் போராட்டம்

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்து செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, கிளை செயலாளர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஓரிரு நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் மீண்டும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறி விட்டு பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story