லெப்பைக்குடிகாட்டில் கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லெப்பைக்குடிகாட்டில் கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு சந்தை திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் முப்பெரும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொள்ள இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லெப்பைக்குடிகாடு உள்ளிட்ட 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழு என்ற அமைப்பும் சேர்ந்து வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு ஆதரவாக செயல்படுவதாக அமைச்சர் சிவசங்கருக்கும் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க லெப்பைக்குடிகாடு பஸ் நிலையத்துக்கு நேற்று மாலை வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து ஏற்கனவே சுவரொட்டி ஓட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு நடந்த முப்பெரும் விழாவிற்கு பணி நிமித்தம் காரணமாக அமைச்சர் சிவசங்கர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் நேற்று இரவு லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலம் அருகே கருப்பு கொடிகள், கருப்பு பலூன்களை கையில் ஏந்தியும், கருப்பு முககவசம் அணிந்து கொண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.