ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
தோகைமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கவுண்டம்பட்டி தெற்குபகுதியில் உள்ள வசந்த நகரில் 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே உள்ள பொதுப்பாதை வழியாக சென்று வந்துள்ளனர். இந்தநிலையில் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால், அந்த வழியாக யாரும் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்துள்ளனர். இதையடுத்்து ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது. அப்போது அந்த பணிகளை சிலர் தடுத்துள்ளனர்.
காத்திருப்பு போராட்டம்
இதற்கிடையில் நேற்று முன்தினம் கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே பொதுப்பாதையில் சிலர் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வசந்தநகர் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் முனிராஜ், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய விசாரணை நடத்தி பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.