குடிநீர் திட்டப்பணிகளை நிறுத்த கோரி பொதுமக்கள் போராட்டம்
கிணறுகளில் தண்ணீர் வற்றியதால் காவிரி ஆற்றில் குடிநீர் திட்டப்பணிகளை நிறுத்த கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிணறுகளில் தண்ணீர் வற்றியது
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் சார்பில் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக 50 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதனால் நஞ்சை புகழூர், தவுட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.