ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் இருந்து தேரடி வரை ஓடை செல்கிறது. இந்த ஓடையை அதே பகுதியை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் சீராக செல்லமுடியாமல் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இ்ந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 14, 15 ஆகிய 2 நாட்கள் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுமையாக முடியவில்லை.

இந்த நிலையில் நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதையடுத்து அனைவரையும் கைது செய்வதாக கூறி அரசு பஸ்சில் ஏறுமாறு போலீசார் கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பஸ்சின் அடிப்பகுதியில் சென்று படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், ஏரி ஆக்கிரமிப்பு பாதி அளவுதான் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

அதற்கு போலீசார் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். மேலும் உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரிடம் கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story