கெங்கவல்லி அருகே தேர்த்திருவிழா நடத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்


கெங்கவல்லி அருகே   தேர்த்திருவிழா நடத்த வலியுறுத்தி  பொதுமக்கள் சாலைமறியல்
x

கெங்கவல்லி அருகே தேர்த்திருவிழா நடத்த வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

கெங்கவல்லி,

கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி 1-வது வார்டு பகுதியில் அருங்காட்டு அம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2004-ம் ஆண்டு திருவிழா நடந்தது. அதன் பின்பு 18 ஆண்டுகள் ஆகியும் திருவிழா நடக்காததால் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர். அதில் ஒரு பிரிவினர் திருவிழா நடத்தக்கூடாது என்றும், மற்றொரு பிரிவினர் திருவிழா நடத்தி ஆகவேண்டும் என்று கூறிவந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படாததால், ஒரு பிரிவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை எங்கள் கோவிலில் தேர்த்திருவிழா நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆத்தூர்-பெரம்பலூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் பேசினர். பின்னர் மீண்டும் ஒரு சமாதான கூட்டம் நடத்திய பின்பு நீங்கள் திருவிழா நடத்தலாம் என்று கெங்கவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story