நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்


நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
x

விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கலெக்டர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று மாலை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு உடல்நலம் விசாரித்தார்.

மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டறிந்ததோடு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ளும்விதமாக அனைத்து வகை சிகிச்சைகளும் தயார் நிலையில் உள்ளன. தற்போது விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மொத்தம் 12 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது சீரான உடல்நிலையுடன் உள்ளனர்.

சிறப்பு மருத்துவ முகாம்

டெங்கு காய்ச்சலை தடுக்கும்பொருட்டு கிராமங்களில் 3 நபர்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் என்று வந்தால் டெங்கு காய்ச்சல் என பொதுமக்கள் கருத வேண்டாம். முழுமையான பரிசோதனைக்குப் பின்னர் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படும். எனவே காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். டெங்கு காய்ச்சல் என்பது ஏ.டி.ஸ்.,ஏ.ஜி.ப்.டி. என்னும் ஒரு வகை கொசுவால் பரப்பப்படும் வைரஸ் காய்ச்சலாகும். எனவே கொசுவை ஒழிக்க ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் தூய்மைப்பணியாளர்களை கொண்டு தண்ணீர் தேங்காத வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவும், பொதுமக்களிடம் குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

பொதுமக்களும் தங்கள் பகுதிகளை சுற்றியுள்ள தண்ணீர் குடங்கள், தண்ணீர் டேங்க் போன்றவைகளை மூடி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் டயர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்புகள், உரல்கள் போன்றவற்றில் தண்ணீர் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன், தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் லதா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story