கருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


கருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x

கருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்

கருப்பூர்:

சேலம் அருகே உள்ள கருப்பூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த 3 பேரை விசாரணைக்காக கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு ேபாலீசார் அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், பொதுமக்கள் கருப்பூர் பேரூராட்சி துணைத்தலைவர் சாந்தி முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, 'விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 3 பேரை உடனே விடுவிக்க வேண்டும். கருப்பூர் பகுதியில் சட்ட விரோதமாக சந்து கடை நடத்தி மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உடனே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி துணைத்தலைவர் சாந்தி முருகேசன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோரிடம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி முற்றுகையிட்டவர்களிடம் கூறும்போது 'யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. தற்போது விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணைக்காக அழைத்தோம், மேலும் இந்த பகுதிகளில் கஞ்சா, மது விற்பனை செய்வோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story