தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளத்தில் முத்தாலம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த இரு கோவில்களிலும் 2 சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வைகாசி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இரு சமுதாயத்திற்கு இடையே கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்தாலம்மன் கோவில், மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த ஆண்டு திருவிழா நடத்த அனுமதி தர வேண்டுமென கோரி அப்பகுதியை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் துணை தாசில்தார் காளிராஜ் மற்றும் செந்தில்குமார், வருவாய்த்துறையினர், போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பொதுமக்கள் தங்களுக்கு இந்த ஆண்டு சாமி கும்பிட உடனடியாக அனுமதி கொடுத்தால் மட்டுமே தாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி தாலுகா அலுவலகத்திற்கு முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு சமுதாயத்தினரை அழைத்து நேற்று மாலை தாசில்தார் உமாமகேஸ்வரி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு சமுதாயத்தினர் இந்த ஆண்டு முத்தாலம்மன் கோவில் திருவிழாவினையும், மற்றொரு சமுதாயத்தினர் இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தவும், அதே போல் அடுத்த ஆண்டு ஒரு சமுதாயத்தினர் மாரியம்மன் கோவில் திருவிழாவும், மற்றொரு சமுதாயத்தினர் முத்தாலம்மன் கோவில் திருவிழாவும் மாறி நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.Next Story