இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் மறியல்


இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் மறியல்
x

மஞ்சுவிரட்டில் காளை முட்டி இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இங்கு மீமிசல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீ்ஸ்காரர் நவநீதகிருஷ்ணன் என்பவர் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றார். பாதுகாப்பு பணியின் போது காளை முட்டியதில் படுகாயமடைந்து பரிதாபமாக அவர் இறந்தார்.

இதையடுத்து இறந்த போலீஸ்காரரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பா.ஜ.க. வினர் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு

மேலும் இரவு பகலாக பணியாற்றக்கூடிய போலீஸ்காரர்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக மஞ்சுவிரட்டில் பாதுகாப்பிற்கான சென்ற போலீசாருக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் நவநீதகிருஷ்ணன் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். மேலும் தமிழக அரசு இறந்த போலீஸ்காரருக்கு தற்பொழுது வரை இரங்கல் செய்தி கூட வெளியிட வில்லை. மேலும் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story