குடிநீர், மின் தட்டுப்பாட்டை சீர் செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்


குடிநீர், மின் தட்டுப்பாட்டை சீர் செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்
x

குடிநீர், மின் தட்டுப்பாட்டை சீர் செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

மறியல்

முசிறி அருகே உள்ள குணசீலம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்பர் சாலை, குடித்தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோக சரியாக இல்லாததோடு, மின்சார தட்டுப்பாடும் இருந்து வந்தது. இதையடுத்து மின்வாரியத்திடம் புது மின்மாற்றி அமைக்க கோரியும், தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் மற்றும் மின் வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உங்கள் கோரிக்கைகள் நாளை (இன்று) நிறைவேற்றப்படும் என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

*மணப்பாறையை அடுத்த செல்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(45). இவரும், அய்யாக்கண்ணு என்பவரும் மோட்டார் சைக்கிளில் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் பிள்ளையார்கோவில்பட்டி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியதில் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புத்தானத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*குழுமணி நம்பியார் ஸ்டோர் பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மகன் ராஜூ (வயது 42). பெயிண்டரான இவர் நேற்று திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தனியார் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இரண்டாவது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

*பொன்மலை அருகே திருச்சியில் இருந்து விருத்தாசலம் செல்லும் ரெயிலில் 60 வயதுடைய முதியவர் அடிபட்டு பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து பொன்மலை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பளையம் என்ற இடத்தில் கனிமவளத்துறை தனி தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு லாரியை நிறுத்தியபோது, டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். அந்த லாரியில் அனுமதியின்றி சவுடு மண் எடுத்து வந்தது தெரியவந்தது. லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பிகள் திருடியவர் கைது

*உப்பிலியபுரத்தை அடுத்த சோபனபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் விரிவாக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக ைவக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளில் 150 கிலோ எடை கொண்ட கம்பிகள் திருட்டு அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை மேற்கொண்டார். இதில் கலிங்கமுடையான் பட்டி மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(30) அந்த கம்பிகளை திருடியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர்.


Next Story