கடலூரில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


கடலூரில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x

கடலூர் தேவனாம்பட்டினத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்ய வெள்ளப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனால் தற்போது மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் அந்தந்த பகுதியில் வைத்து தீயிட்டு கொளுத்தி வந்தனர். இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் மாநகராட்சி சார்பில் தற்காலிக குப்பை கிடங்கு அமைக்க முடிவு செய்து, அதற்காக தேவனாம்பட்டினம் சுனாமி நகரில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் இருந்த செடி-கொடிகள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.

முற்றுகையிட்டு வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று காலை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி ஒன்று சுனாமி நகருக்கு சென்றது. இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, லாரியை சிறைபிடித்தனர். பின்னர் சாலையில் மரக்கட்டைகள் மற்றும் சிமெண்டு சிலாப்புகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, நகரமைப்பு ஆய்வாளர் அருள்செல்வன் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ஏற்கனவே எங்கள் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தால் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

இந்த சூழ்நிலையில் இங்கு குப்பை கிடங்கும் அமைந்தால், மேலும் நாங்கள் பாதிக்கப்படுவோம். மேலும் துர்நாற்றம் வீசினால் வீடுகளில் இருக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் எங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என்றனர்.

அதற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கடலூரில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து

லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


Next Story