ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதி


ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே உப்பனாற்றின் குறுக்கே உள்ள ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி அருகே உப்பனாற்றின் குறுக்கே உள்ள ஆபத்தான நடைபாலத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பனாறு

சீர்காழி அருகே புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் குக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியே உப்பனாறு செல்கிறது. இங்குள்ள பொதுமக்கள் சென்று வரும் வகையில் அந்த ஆற்றின் குறுக்கே மரப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து இந்த கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்கு சென்று வந்தனர்.

இந்த ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய அளவில் இரும்பு கம்பங்கள் அமைத்து, அதன் மீது சிமெண்டு சிலாப்புகள் மூலம் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தின் வழியாகவே தான் வெள்ளப்பள்ளம் மக்கள் புதுத்துறை வழியாக பூம்புகார், திருவெண்காடு மற்றும் சீர்காழி பகுதிக்கு சென்று வந்தனர்.

உடைப்பு ஏற்பட்டு...

இந்த நிலையில் இந்த பாலம் சில ஆண்டுகளாக சேதம் அடைந்து, இரும்பு தூண்கள் துருப்பிடித்தும், அடிப்புறம் தூண் சிதலமடைந்தும் ஆபத்தான நிலையில் உடைந்து தொங்கியவாறு உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து செல்கின்றனர். இந்த பாலத்தை விட்டால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு புதுத்துறை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

தற்போது பாலம் திடீரென உடைந்து கீழே விழும் அபாயம் நிலையில் உள்ளதால் இந்த பகுதியில் புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள உப்பனாறு கரையில் கடந்த ஆண்டு சீர்காழியில் பெய்த அதீத கனமழையின் போது உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் கிராமத்தில் புகுந்தது. ஆனால் அந்த உடைப்பு ஏற்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில் இதுவரை சரி செய்யப்படவில்லை.

3 பக்கமும் தண்ணீர்

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், வெள்ளப்பள்ளம் கிராமம் மூன்று பக்கமும் தண்ணீரால் சூழ்ந்ததாகும். ஊரிலிருந்து வெளியே செல்ல வேண்டுமென்றால் சிறிய பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது பாலமும் சிதலமடைந்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தரவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உப்பனாறு கரைகளை பலப்படுத்தி தரவேண்டும் என்றனர்.


Next Story