பஸ்சின் மேற்கூரையில் பொதுமக்கள் பயணம் டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு
மோகனூர்
திருச்சியில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், மோகனூர் வழியாக பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை முசிறி அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்த தமிழழகன் (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். இதில் கண்டக்டர் இளங்கோவன் (28) என்பவர் உடன் வந்தார். இந்தநிலையில் அந்த தனியார் பஸ் நவலடியான் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு நின்றுகொண்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பஸ்சின் மேற்கூரை மீது ஏறி அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் அந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து வந்த பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பஸ் டிரைவர் தமிழழகன், கண்டக்டர் இளங்கோவன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.