முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 27 July 2023 6:45 PM GMT (Updated: 27 July 2023 6:46 PM GMT)

8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்துல்கலாம் நினைவு தினம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 8-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அணு விஞ்ஞானி, பேராசிரியர், அறிவியலாளர் என பன்முகத்தன்ைம கொண்ட அப்துல் கலாம், உயர் பதவிகளை அலங்கரித்தாலும் எளிமையான வாழ்வுக்கு இலக்கணம் தந்து, எண்ணற்ற மக்களின் அன்பை பெற்றவர். பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.

உயர்ந்த லட்சியத்தை நிர்ணயித்து கனவு காணுங்கள், விடாமுயற்சி செய்யுங்கள், வெற்றி அடையுங்கள் என மாணவ-மாணவிகளுக்கு உத்வேகம் தந்தவர். அவரது நினைவு தினத்தையொட்டி நேற்று அஞ்சலி செலுத்துவதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கு மக்கள் வந்திருந்தனர்.

குடும்பத்தினர் அஞ்சலி

பேய்க்கரும்பு பகுதியில் அமைந்திருக்கும் கலாம் மணிமண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று காலை 9 மணி அளவில் கலாமின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், மருமகன் நிஜாமுதீன், பேரன்கள் சேக் தாவுது, ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் சிறப்பு துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மணிமண்டப பொறுப்பாளர் அன்பழகன், டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, டாக்டர் விஜயராகவன், சமூக ஆர்வலர் கராத்தே பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அஞ்சலி செலுத்திய கலெக்டர்

இதை தொடர்ந்து கலாம் நினைவிடத்தில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பூ தூவி அஞ்சலி செலுத்தினார்.

ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மாணவர்களுக்கு பரிசுகள்

கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பவுண்டேஷன் மற்றும் நல்லோர் வட்டம் அமைப்பு சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story