நாய்கள் தொல்லையால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி


நாய்கள் தொல்லையால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அளவற்ற பாசம்

குழந்தைகளுக்கு நிகராக பலரது வீடுகளில் நாய் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது. தன்னை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடும் இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான்.

வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக நாய் விளங்குகிறது என்றால் அது மிகையில்லை. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதாலும், தடுப்பூசிகள் போடப்படுவதாலும் அவைகளால் பெரும்பாலும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

சுற்றித்திரியும் நாய்கள்

ஆனால் தெருக்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் நாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பல்வேறு சிரமங்களுக்கும், பாதிப்புகளுக்கும் ஆளாகி வருகின்றனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் பிடித்துச்சென்று அந்த நாய்களுக்கு கருத்தடை செய்து 'ரேபிஸ்' ஊசியையும் செலுத்தி சிறிது காலம் பராமரித்து பின்னர் பிடித்த இடத்திலேயே அவைகளை விட்டு விடுவார்கள். இதனால் நாய்களின் இனப்பெருக்கம் குறைந்தது.

இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படாததால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கும்பகோணம் மாநகரில் ரெயில் நிலையம், நால்ரோடு, பஸ்நிலையம், உழவர் சந்தை அருகே மற்றும் மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் 10 நாய்கள் சுற்றித்திரிவதை பார்க்கலாம்.

விபத்து

இந்த நாய்கள் வீதிகள், சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால் இருசக்கர வாகனம், கார்களில் செல்வோர் விபத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. நடந்து செல்வோர் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோரை நாய்கள் விரட்டி செல்கின்றன. குழந்தைகளை துரத்தி சென்று கடித்து குதறி வருகிறது.

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்களால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்வோரை மட்டுமின்றி வாகனங்களில் செல்வோரையும் துரத்தி வருவதால் விபத்து ஏற்படுகிறது.

தொற்று நோய் பரவும் அபாயம்

குறிப்பாக கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. சில பகுதிகளில் உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய நாய்கள் சுற்றித்திரிவதால் மனிதர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நாய்களை கட்டுப்படுத்த நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது கால்நடைத்துறை சார்பில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி தெரு நாய்களுக்கு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story