நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு


நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 24 Aug 2023 6:00 AM IST (Updated: 24 Aug 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் அமரித் நேற்று வெளியிட்டார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் அமரித் நேற்று வெளியிட்டார்.

3 சட்டமன்ற தொகுதிகள்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 3 தொகுதிகளிலும் சுமார் 5¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் ஊட்டி தொகுதியில் 138 இடங்களில் 239 வாக்குச்சாவடிகளும், கூடலூர் தொகுதியில் 99 இடங்களில் 222 வாக்குச்சாவடிகளும், குன்னூர் தொகுதியில் 132 இடங்களில் 225 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 686 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடி உருவாக்கும் பணிகள் மற்றும் ஏற்கனவே இருந்த பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பட்டியல் வெளியீடு

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார்.

இதன்படி ஊட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 239 வாக்குச்சாவடிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கூடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 222 வாக்குச்சாவடிகளுடன் கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்து உள்ளது. குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 225 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளதால் 226 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 3 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 689 ஆக உயர்ந்துள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, முகமது குதரதுல்லா, தேர்தல் பிரிவு தாசில்தார் காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story