யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 2 Sep 2023 10:15 PM GMT (Updated: 2 Sep 2023 10:15 PM GMT)

யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.

தர வரிசை பட்டியல்

யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான (பி.என்.ஒய்.எஸ்.) தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த பட்டியலை வெளியிட்டார்.

தர வரிசை பட்டியலில் மாணவி ஸ்ரீலேகா, சுபஸ்ரீ ஆகியோர் 199.50 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பிடித்தனர். நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவி சுஷ்மிதா 197.50 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி வைதீஸ்வரி 195.50 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்தனர். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் முதல் 2 இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர்.

11-ந் தேதி கலந்தாய்வு

தர வரிசை பட்டியலை வெளியிட்ட பின்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

2023-24-ம் ஆண்டுக்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட படிப்புகளுக்காக 2 ஆயிரத்து 49 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் ஆயிரத்து 990 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசு சார்பில் 2 யோகா கல்லூரியும், தனியார் சார்பில் 17 யோகா கல்லூரியும் உள்ளன. இதில், மொத்தம் ஆயிரத்து 660 இடங்கள் உள்ளன.

தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு 11-ந் தேதி தொடங்குகிறது. 11-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. அதேபோன்று 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 14-ந் தேதி நடக்கிறது. அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பெரிய அளவில் வரவேற்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கின்றது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புக்கான மத்திய அரசின் 15 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

இந்த இடங்கள் நிரப்பப்பட்டதும் தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். இதில், தமிழ்நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 100 இடங்கள் உள்ளன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 2-வது வாரத்தில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது எம்.கே.மோகன் எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story