மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு


மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்  வெளியீடு
x

மறு சீரமைப்பு செய்யப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்.

திருப்பத்தூர்

வாக்குச்சாவடி பட்டியல்

சீரமைப்பு செய்யப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1,038 வாக்குச்சாவடிகள்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்து வாக்குச்சாவடிகளின் பட்டியலை வெளியிடுமாறு தெரிவித்திருந்தது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,038 வாக்குச்சாவடிகளை அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து வருகின்றனர்.

இந்த வகையில் வாணியம்பாடி தொகுதியில் 259 வரைவு வாக்குசாவடிகள், ஆம்பூரில் 245, ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் தலா 267 என மொத்தம் 1,038 வரைவு வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. மேலும் வரப்பெறும் முன்மொழிவுகளின் அடிப்படையில் புதிதாக வாக்குச்் சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றார்.

ஆட்சேபனை தெரிவிக்கலாம்

அதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,500-க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் ஏதும் இல்லை, மேலும் வரைவு வாக்குசாவடி பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் சப்-கலெக்டர்கள் அலுவலகங்களிலும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களிலும் விளம்பரபடுத்தப்படும்.

அரசியல் கட்சிகள், பொதுமக்கள் யாருக்காவது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப்-கலெக்டர்கள் பானு, பிரேமலதா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்,


Next Story