கால்நடை மருத்துவப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு


கால்நடை மருத்துவப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு
x

கால்நடை மருத்துவப்படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்ணை 33 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச்.), இளநிலை தொழில்நுட்ப (உணவு, கோழியினம், பால்வளம்) பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அதன்படி, இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களும், தொழில்நுட்ப படிப்புகளில் 100 இடங்களும் இருக்கின்றன. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 22 ஆயிரத்து 535 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு இருந்தன. இதில் 18 ஆயிரத்து 752 விண்ணப்பங்கள் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கும், 3 ஆயிரத்து 783 விண்ணப்பங்கள் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் வந்திருந்தன.

33 பேர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்

விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in என்ற இணையதளங்களில் நேற்று காலை வெளியிட்டது. இதில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 31 பேர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்ணை எடுத்து இருக்கின்றனர். அவர்களில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் விவரம் வருமாறு:-

1) எம்.ராகுல்காந்த் (அரியலூர்), 2) வி.கனிமொழி (தர்மபுரி), 3) எஸ்.முத்துலட்சுமி (தென்காசி), 4) கே.நந்தினி (அரியலூர்), 5) ஏ.கிரேஸ் கிறிஸ்டி (திருப்பத்தூர்), 6) டி.விஷ்வா (தர்மபுரி), 7) வி.வசந்தி (அரியலூர்), 8) எம்.லோபஷைனி (நாமக்கல்), 9) எஸ்.சக்திகுமரன் (அரியலூர்), 10) எஸ்.கவுசிகா (கரூர்).

இதேபோல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியலிலும் 2 பேர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் எடுத்திருக்கின்றனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

கலந்தாய்வு

1) கே.விக்னேஷ் (சேலம்), 2) எஸ்.அஜய் (பெரம்பலூர்), 3) வி.பானுபிரியா (திருவண்ணாமலை), 4) டி.நித்யா (மதுரை), 5) தாமரைச்செல்வி (மதுரை), 6) வி.சிவா (பெரம்பலூர்), 7) சி.ஜெயபிரியா (தர்மபுரி), 8) சி.அரவிந்தன் (திருவள்ளூர்), 9) எம்.விஷ்வா (ராமநாதபுரம்), 10) கே.பாலாஜி (தர்மபுரி).

தொழில்நுட்ப படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் விஷ்ணுபிரகாஷ் 199.50 கட்-ஆப் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.

தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தரவரிசைப்பட்டியல் தொடர்பாக சந்தேகம் இருந்தால், 044-29994348, 29994349 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Next Story