புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

கவனிக்கப்படுமா?

தமிழ்நாடு அரசு குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ்களை இயக்கி வருகிறது. இதில் மொபைல் சார்ஜிங் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் எந்தப் பஸ்சிலும் இது சரியான முறையில் வேலை செய்வதில்லை. டிரைவர் மற்றும் நடத்துனரிடம் இது பற்றி விசாரித்தால் அவர்கள் சரியான முறையில் பதில் அளிப்பதில்லை.சம்பந்தப்பட்ட துறையினர் இதனை கவனிக்க வேண்டும்.

அஜிஸ், ராமநாதபுரம்.

பாதுகாப்பு கேள்விக்குறி

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிலர் எந்த அனுமதியும் பெறாமல் பல ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கின்றனர். சமீப காலமாக முழு அளவில் கார் ஓட்டும் பயிற்சியும் அளிப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ராமநாதபுரம் மாவட்ட ராஜசிங்கமங்கலம் தாலுகா அருகே ஆய்ங்குடி பஞ்சாயத்து மாந்தாங்குடி கிராம சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் சூழ்ந்து உள்ளன. மேலும் சாலை மோசமான நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும். இளங்கோ, மாந்தாங்குடி.

சுகாதாரநிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் அமைந்திருக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்தநிலையில் பணி முழுமை அடைந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் சுகாதார நிலையம் வரவில்லை. இதனால் சுற்றுவட்டார மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நோயாளிகள் சிகிச்சைக்காக சுமார் 5 கி.மீ. வரை செல்கின்றனர்.எனவே மக்களின் நலன் கருதி மீண்டும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அர்சாத் அலி, வண்ணாங்குண்டு.

தெருவிளக்குகள் இல்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியின் வைகை ஆற்றின் கரையோரப்பகுதி சாலையில் தெருவிளக்குகள் இல்லை. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்தநிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனஓட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி வருகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும்முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். பொதுமக்கள், பரமக்குடி.

பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுமா?

சிவகங்கை மாவட்டம் கல்லல் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பொதுமக்கள் பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?

தேவி, கல்லல்.

சட்ட விரோத மது விற்பனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சில மதுக்கடைகளுடன் கூடிய பார்கள் செயல்பட்டு வருகிறது. அதில் சில பார்களில் காலை 10 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனையை தொடங்கி விடுகின்றனர். இதனால் காலையிலேயே மது பிரியர்கள் மது குடித்து விட்டு ஆங்காங்கே படுத்து கிடக்கின்றனர். இதனால் பெண்களும், மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பாலமுருகன், காரைக்குடி.

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் கல்லல் பாரதி நகர் 2-வது வீதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளின் உள்ளே குரங்குகள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்று விடுகின்றது. வீடுகளின் வெளியே சிறு குழந்தைகள் விளையாடும்போது கடிக்க வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ெசல்வா, கல்லல்.

அங்கன்வாடியில் அடிப்படை வசதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா தளக்காவூர் கிராமத்தில் கருப்பர் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் இல்லை. இதனால் இதில் படிக்கும் குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை சரியான முறையில் ஏற்படுத்தி தரவேண்டும்.

பொதுமக்கள், தளக்காவூர்.

சாலையில் தேங்கும் மழைநீர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள வடகரை என்னும் கிராமத்தில் முதல் தெருவில் சாலை வசதியும் வடிகால் வசதியும் கிடையாது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து வடிகால் வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்புவனம் வடகரை.

1 More update

Next Story