மாநில தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடித்தால் பா.ஜ.க. வளராது-சேலத்தில் புகழேந்தி பேட்டி
மாநில தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடித்தால் பா.ஜ.க. வளராது என்று சேலத்தில் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.
சேலத்தில் பெங்களூரு புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நாளை (இன்று) நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. சேலம் மாநகர் மாவட்ட கழகம், புறநகர் மாவட்ட கழகம் சார்பில் கலந்து கொள்கிறோம். தென்மாவட்டங்களில் உள்ள மக்கள் எடப்பாடி பழனிசாமியை எதிரியாக நினைக்கின்றனர். இதன் எதிரொலியாக தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நடைபெறும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. தென் தமிழக மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.
அ.தி.மு.க.வில் இருந்து ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட கே.பி.முனுசாமி, அவரது மறைவுக்கு பிறகு அரசியல் வாழ்க்கை வந்தது. இவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவை பெற்று தான் பல பதவிகளை பெற்று வளர்ச்சியடைந்தார். தற்போது அவரையே அவதூறாக பேசிவருகிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும்.
கோவை வெடிவிபத்தில் விசாரணை அறிக்கை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ரகசியங்கள் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுவது குறித்து உள்துறை அமைச்சகத்தில் தான் கேள்வி கேட்க வேண்டும். மாநில தலைவராக அண்ணாமலை தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தில் பா.ஜ.க. வளராது. எனவே அவரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.