புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ஈரோடு

சாலை அமைக்கப்படுமா?

ஈரோடு ரங்கம்பாளையத்தில் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அரசுத்துறை அதிகாரிகளும் தினசரி வந்து செல்லும் இடமாக உள்ளது. ரங்கம்பாளையம் ரோட்டில் இருந்து பதிவாளர் அலுவலகம் செல்லும் ரோடு மண் சாலையாக, குண்டும்-குழியுமாக உள்ளது. இங்கு வயதானவர்கள் பலரும் பத்திர பதிவுக்காக வரும்போது மிகவும் தடுமாறுகிறார்கள். மிக முக்கியமான அரசு அலுவலகத்துக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக போடப்படாமல் இருக்கிறது. இங்கு தனியார் பள்ளிக்கூடமும் உள்ளது. இந்த பள்ளிக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மழை பெய்தால் நடந்து கூடசெல்ல முடியாத வகையில் உள்ளது. எனவே இங்கு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கோ, ரங்கம்பாளையம்.

ஓடை பராமரிக்கப்படுமா?

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட வரதம்பாளையம் திப்பு சுல்தான் ரோட்டில் கழிவு நீர் ஓடை உள்ளது. இது கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த ரோடு வழியாக இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டுக்கும், ஓடைக்கும் இடையே தடு்ப்புச்சுவர் இல்லாததால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த திப்பு சுல்தான் ரோட்டை அகலப்படுத்தி, கான்கிரீட்டாலான தடுப்புசுவர் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சத்தியமங்கலம்

குடிநீர் வினியோகிக்கப்படுமா?

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டில் எஸ்.ஆர்.டி. நகர் உள்ளது. இங்கு பவானி ஆற்றில் இருந்து மேல்நிலை தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக சரியாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் தெருவிளக்கு வசதியும் செய்யப்படவில்லை. உடனே சீராக குடிநீர் வினியோகிக்கவும், தெருவிளக்கு வசதி செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.மூர்த்தி, புஞ்சைபுளியம்பட்டி.

மாற்றுப்பாதையில் பஸ்கள்

மேட்டூரில் இருந்து பவானி, சித்தோடு வழியாக ஈரோடு செல்லும் சில தனியார் பஸ்கள் சித்தோடு வழியாக செல்லாமல் மாற்று வழிப்பாதையான அக்ரஹாரம் வழியாக ஈரோடு செல்கிறது. இதனால் சித்தோட்டில் இருந்து பஸ்சில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் அக்ரஹாரம் வழியாக செல்லும் பஸ்களை சித்தோடு வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான், பவானி.

கழிப்பிட வசதி

பவானி அருகே உள்ள ஆண்டிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது பழைய காடையம்பட்டி. இங்கு ஆண்களுக்கு தனியாக கழிப்பிட வசதி இல்லை. இதனால் பொது இடங்களையே கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் பழைய காடையம்பட்டியில் ஆண்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பழைய காடையம்பட்டி.

பயன்பாட்டுக்கு வருமா?

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சி சின்ன செங்குளம் பகுதியில் மேல்நிலைத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. விரைவாக இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி, பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுமக்கள், பர்கூர்.

ஆபத்தான மேல்நிலைத்தொட்டி

அந்தியூர் மைக்கேல் பாளையத்தில் மேல்நிலைத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி பழுதடைந்துவிட்டதால் தண்ணீர் கசிகிறது. இதன்காரணமாக எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் தொட்டி இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியை விரைவில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர்ப்பொதுமக்கள், மைக்கேல்பாளையம்.

திறந்து கிடக்கும் தொட்டி புகார் பெட்டி

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் செல்லும் ரோட்டில் பாதாள சாக்கடை தொட்டி திறந்து கி்டக்கிறது. அந்த வழியாக நடந்து வருபவர்களுக்கோ, இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கோ பாதாள சாக்கடை திறந்து கிடப்பதே தெரியாது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை அடைப்பார்களா?

பொதுமக்கள் கருங்கல்பாளையம்.


Next Story