புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

ஓடையில் குப்பை

சித்தோடு பேரூராட்சி அண்ணா நகர் அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் ஓடை குப்பை தொட்டியாகும் நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனே இதை கவனிக்குமா?

பொதுமக்கள், சித்தோடு.

குளம்போல் தேங்கும் மழைநீர்

ஈரோடு பார்க் ரோட்டில் ஸ்டார் தியேட்டர் எதிரில் ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் இதனால் கீழே விழுந்து விட்டார்கள். மாநகராட்சி அதிகாரிகள் உடனே இதை சரிசெய்யவேண்டும்.

சந்தானம், ஈரோடு,

தெருவிளக்குகள் இல்லை

ஈரோடு முள்ளாம்பரப்பில் இருந்து கிளியம்பட்டி செல்லும் சாலையில் பண்ணை நகர் அமைந்துள்ளது. இங்கு தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாடுகின்றன. அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பண்ணை நகருக்கு தெருவிளக்குகள் அமைத்து கொடுப்பார்களா?

பொதுமக்கள், ஈரோடு.

வெளிச்சம் வேண்டும்

ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு பெரியவலசு திலகர் வீதியில் கடந்த ஒரு மாதமாக 2 தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால் வெளிச்சம் இன்றி வீதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. முதியவர்கள், பெண்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள் உடனே இதை சரிசெய்யவேண்டும்.

ரத்தினபிரபு பெரியவலசு.

ஆபத்தான குழி

ஈரோடு சென்னிமலை ரோடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ரவுண்டானா புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே நுழைவுபாலம் பணிகள் நடந்து வருவதால், நாடார்மேடு பகுதியில் இருந்து வரும் அனைத்து பஸ்கள், கனரக வாகனங்கள் சாஸ்திரிநகர், சென்னிமலைரோடு ரவுண்டானா வழியாக செல்கின்றன. அந்த ரவுண்டானாவில் ஆபத்தான பள்ளம் உருவாகி இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்பனா, சாஸ்திரிநகர்.

நிழற்குடை வசதி

பவானி காலிங்கராயன்பாளையத்தில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் ரோட்டில் மூவேந்தர் நகர் உள்ளது. இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் காய்கிறார்கள். மழையில் நனைகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூவேந்தர் நகரில் நிழற்குடை அமைப்பார்களா?

காளியப்பன், மூவேந்தர் நகர்.

வழிகாட்டி பலகை இல்லை

அத்தாணியில் மூனுரோடு சந்திப்பு உள்ளது. அந்தியூர், பவானி, சத்தி என 3 ஊர்களுக்கும் ரோடுகள் பிரிந்து செல்கின்றன. ஆனால் இங்கு வழிகாட்டி பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பரிதவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

ஊர்ப்பொதுமக்கள், அத்தாணி.



Next Story