குழந்தை திருமணத்துக்கு உடன்படும் பெற்றோர்களுக்கு தண்டனை; கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை


குழந்தை திருமணத்துக்கு உடன்படும் பெற்றோர்களுக்கு தண்டனை; கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2023 7:13 PM GMT (Updated: 7 Jun 2023 3:04 AM GMT)

குழந்தை திருமணத்துக்கு உடன்படும் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கிராம மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் ஆகியவற்றின் சார்பில் கவுல்பாளையம் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் மேகலா ஆகியோர் இணைந்து கவுல்பாளையம் கிராம மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

அப்போது அவர்கள், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண்கள் 181, 112 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினா். மேலும் பெற்றோர்கள் அனைவரும் தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமண வயது நிரம்பாமல் திருமண ஏற்பாடு செய்வது குழந்தை திருமணம் என்றும், அத்தகைய செயலுக்கு உடன்படும் பெற்றோர்களும் குற்றம் புரிந்தவராகவே கருதப்பட்டு, அவர்களுக்கும் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் ெதரிவித்ததோடு, குழந்தை திருமணம் குறித்து விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி குழந்தைகளை தனியாக நீர் நிலைகளில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினா். பின்னர் அவர்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


Next Story