பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2023 7:19 PM GMT (Updated: 25 Jun 2023 12:16 PM GMT)

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்

திருச்சி

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.380 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மதியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் பன்னோக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 5 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலைய கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் இந்த பஸ்நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். மேலும் இந்த பகுதியில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் மார்க்கெட் கட்டவும், குடமுருட்டி ஆற்றில் இருந்து கோரையாறு வரை சிமெண்டு சாலை அமைக்கவும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நிதிஒதுக்கீடு வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

அத்துடன் இங்கு 10 ஏக்கர் பரப்பளவில் ஐ.டி. பார்க் வரவுள்ளது. புதிதாக அமைக்கப்படும் இந்த பஸ்நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக பஸ்நிலையத்துக்குள் வரவும், சென்னை கத்திப்பாரா மேம்பாலம் போல் இங்கு அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஆலோசனை செய்துள்ளோம். மேலும் ரூ.300 கோடி செலவில் 100 எம்.எல்.டி. கொள்ளளவில் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.1,500 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, கலெக்டர் பிரதீப்குமார், மேயர்அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story